அணு விதைத்த உறவு

நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பானது, நமக்கு அவரிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாம் ஒருவர் மீது வைத்துள்ள நம்பிக்கையே, நமக்கு அவரிடமுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. எனக்கு என் மகன் மீது நம்பிக்கை உள்ளது, அவன் என்னை கடைசி வரை வைத்து காப்பாற்றுவான், எனக்கு என் பெண் மீது நம்பிக்கை  உள்ளது, அவள் நான் சொல்லும் பிள்ளையை தான்  திருமணம் செய்து  கொள்வாள், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது, அவர் என்னை கைவிட  மாட்டார் என்று பலரும் கூற நாம் கேட்டதுண்டு. மனிதர்கள் மட்டுமல்ல இதில் நாம் கடவுளையும் விட்டு வைப்பதில்லை. நமது நம்பிக்கையின் மூலாதாரமே அவர்கள் மீது நாம் வைத்திருக்கும்  எதிர்பார்ப்பை அவர்கள் கண்டிப்பாக பூர்த்தி செய்வார்கள் என்றாகிறது. இவ்வாறு எதிர்பார்பதினால், நம்முடைய சிந்தனை சுயநல எண்ணங்களால் சூழப்படுகிறது. காலப்போக்கில், நாம் மற்றவர் மீது  வைக்கும் அன்பை விட, நம்பிக்கையை விட, நமது சுயநல எண்ணமே மேலோங்கி நிற்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், அது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏமாற்றத்தை கையாளும் முறை, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மற்றவர்களை தண்டிப்பது, மற்றவரிடம் இருந்து விலகுவது, அல்லது தன்னையே தண்டித்துக் கொள்வது, தான்  காட்டும் பாசம் குறைவோ என்று இன்னும் அதிகமாக பாசத்தைக் காட்டி மற்றவர்களை கவர முயற்சிப்பது,  மற்றவர்களை குற்றவாளிகளாக அவர்களே நினைக்கும் படி தூண்டுவது போன்ற பல விஷயங்களில் ஈடுபடுவதுண்டு. ஆனால், இதில் எந்த முறையுமே இதுவரை வெற்றி பெற்றதாக சரித்திரம் சொல்லவில்லை, மேலும், அந்த உறவை நாம் இழப்பதற்கான அடித்தலத்தை இவைகள் கச்சிதமாக அமைக்கின்றன.

தீர்க்கமான நம்பிக்கை இருக்க வேண்டும், ஆனால் எதிர்பார்ப்பு இருக்க
கூடாது, அளப்பறிய அன்பு இருக்க வேண்டும், ஆனால் சுயநலம் இருக்க கூடாது, போற்றிப் புகழலாம், ஆனால் சொந்தம் கொண்டாட கூடாது… இப்படி ஒரு நிலை சாத்தியமா? இந்த நிலைக்கு பெயர் என்ன? எதற்காக இப்படி ஒரு நிலை அவசியம்? இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு தெரிந்த பதில்களை பார்க்கலாம். ஆம், இப்படி ஒரு நிலை நிச்சயமாக இருக்கிறது. இந்த ஒரு நிலையை தான் “பக்தி” என்று கூறுவதாக பார்க்கிறேன். பக்தி என்பது கடவுளுக்கும், நமக்கும் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாக இருக்கிறது. இந்த பக்தியை தான் மற்ற உறவுமுறைகளுக்கும் (குரு பக்தி, பதி பக்தி) பொருந்துமாறு அமைத்திருக்கிறார்கள். ஆனந்தமான உறவுகளுக்கு இந்த நிலையை தான் நம் முன்னோர்கள் நமக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

உறவுகள் என்றாலே நம் சிந்தனை நம்மை சுற்றி உள்ள மனித உறவுகளையே தான் காண்கிறது ஆனால் உண்மையில் ஒவ்வொரு உயிருக்கும் உற்ற உறவினன் “இறைவன்” மட்டுமே. ஒவ்வொரு உயிரனங்களுக்கும் இதுவே முதன்மையான உறவாக அமைகிறது. இந்த உறவு மட்டும் தான் ஆதியும், அந்தமும் இல்லாத உறவோ என்றும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மனிதன் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும், கோவிலுக்கு சென்று வந்தால், நம்மையும் அறியாமல் மனம் சற்று ஆறுதலாக இருப்பதன் காரணம், நமக்கு மிக நெருக்கமான உறவைக் கண்டு, பேசி விட்டு வருவதால் தானோ என்றே தோன்றுகிறது. அதனால் தான், எல்லா பக்தியை விடவும் இறை பக்தி தான் சிறந்தது என்றும், அதை ஒவ்வொருவரும் தலையாய கடைமையாக செய்ய வேண்டும் என்றும் கூறுவதன் காரணம், இந்த உலகத்தில் எந்த உறவை இழந்தாலும், இறை உறவை நாம் இழக்காமல் இருப்பதற்கே என்றே நினைக்கிறேன். அதனால் தான், முக்கியமாக கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே உள்ள உறவு இந்த நிலையில் தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்கள். இதுவே முதன்மையான உறவு என்ற புரிதலும், இந்த உறவை எந்நேரத்திலும் இழந்து விட கூடாது என்ற உறுதியும் இருந்தாலே, பக்தி என்னும் தூய்மையான காற்றை நாம் சுவாசிக்க ஆரம்பித்துவிடுவோம் என்றே நினைக்கிறேன்.

இப்படி ஒரு புனிதமான உறவை எப்படி பேணி பாதுகாப்பது? இதற்கான பதிலும் எளிதாகவே இருக்கிறது. உதாரணமாக, நம் மனித உறவுகளை எப்படி நாம் பேணி பாதுகாக்கிறோம்? எப்படி சந்தோஷப் படுத்துகிறோம்? பாடிக் காட்டுகிறோம், நடனமாடிக் காட்டுகிறோம், சமைத்துக் கொடுக்கிறோம், பரிசு தருகிறோம், அன்பு காட்டுகிறோம், இனிமையான மொழிகளை உதிர்கிறோம், புகழ்ந்து பேசுகிறோம். இத்தனை செய்தாலும், மனித உறவுகள் எந்த நேரத்திலும் அறுபட்டு போய்விடும். இப்படி ஒரு அநித்தியமான உறவுக்கே, அதை தக்க வைத்துக்கொள்ள நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் அபாரமானதாக இருக்கிறது.

அப்படியென்றால், நித்யமான இந்த உறவுக்கு நாம் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்று சிந்திக்க தோன்றுகிறது. ஒரு பக்தன் என்பவன் கடவுளோடு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கு ஆதிசங்கரர் சில உவமைகளை கூறியுள்ளார். அவை என்னவென்றால், ஊசியும் நூலும் பிரியாமல் இருப்பது போலவும், அழிஞ்சில் விதை அந்த மரத்தோடு சென்று சேர்ந்துவிடுவது போலவும் (அழிஞ்சில் மரத்து விதைகளுக்கு விந்தையான ஒரு குணமுண்டு. மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் அதன் விதைகளை அழிஞ்சில் மரமே காந்தம் போல தனக்குள் ஈர்த்துக் கொள்ளும்) ஒரு பக்தனானவன் கடவுளை சென்று சேர வேண்டும் என்று ஆதிசங்கரர் கூறுகிறார். ஒவ்வொரு உயிரும் இந்த உறவை புரிந்துக் கொண்டு, அன்பு காட்டி, நேசித்து, பக்தி செய்து, கடைசியில் இந்த உறவோடு பிண்ணி பிணைந்து விடுவதையே அதாவது இறைவனோடு ஒன்றி விடுவதையே, மோட்சம் என்று கூறுவதாக பார்க்கிறேன். தன் வாழ்நாளில், இப்படிபட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது ஒருவன் இறக்க நேர்ந்தால், பக்தியை அந்த ஆத்மா விட்ட இடத்தில் இருந்து தொடரக் கூடிய சூழ்நிலையையும், பிறப்பையும் தானே அமைத்துக் கொடுப்பதாக கண்ணன் கீதையில் கூறியுள்ளார். இறைவனுடன் இருக்க கூடிய உறவை பலப்படுத்தவும், நமக்கும் அவருக்கும் இடையிலான நூல் அறுபடாமல் இருக்கவும், அன்பை வெளிப்படுத்தும் விதங்களாகவும் பல எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளை தான் நவபக்தி என்று கூறுகிறார்கள் அதாவது ஒன்பது விதமான வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  1. ஷ்ரவணம் – பகவத் கதை கேட்பது
  2. கீர்தனம் – பகவத் கதை பாடுவது (அல்லது) சொல்வது
  3. ஸ்மரணம்   பகவத் தியானம்
  4. பாத சேவனம்  பாத சேவை புரிதல்
  5. அர்சனம்  பூஜை செய்தல்
  6. வந்தனம்  நமஸ்கரித்தல்
  7. தாஸ்யம்  தொண்டு செய்தல்
  8. ஸாக்கியம்  நட்பு பாராட்டுவது
  9. ஆத்ம நிவேதனம்  தன்னையே ஒப்புவித்தல்

இவைகளில் எதை வேண்டுமானாலும் நாம் பின்பற்றி, இறைவனிடம், நமது அன்பையும், பாசத்தையும் பொழியலாம். எல்லாம் சரி தான், இவைகளை பின்பற்றியவர் யாரும் உலகத்தில் உண்டா? இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா? அவர்கள் என்ன ஆனார்கள்? நமது மனித மனம், எவ்வளவு சொன்னாலும், எதிர்பார்பதை விடுவதில்லை. எல்லாவற்றிர்க்கும் அத்தாட்சியை தேடும். அதுவும் ஒரு வகையில் நன்மை தான். இதன் மூலம், ஒன்பது சிறந்த பக்த   சிகோன்மணிகளை பற்றி நாம் தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் 9 பேரும், நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சியமானவர்களே, ஆனால், பக்தி வழிமுறைகள் என்னும் கண்ணோட்டத்தில், நாம் இவர்களையும், இவர்கள் வாழ்க்கையையும் பார்த்தால், நவபக்தி நமக்கு எளிதாக புரிந்துவிடும்.

Nava Bhakthi - Tamil Version

  1. பரிக்க்ஷித்து மஹாராஜா பாகவத கதை கேட்டே மோட்சத்தை அடைந்தார்.
  2. சுகர், பாகவதம் பாடியே இறைவனிடம் சென்றார்.
  3. ப்ரகலாதர், பகவத் ஸ்மரணத்தினாலேயே, பக்த குல சக்ரவர்த்தி என்ற பட்டத்தை இறைவனிடமிருந்தே பெற்றார்.
  4. இலக்குவன், ராமருக்கு பாத சேவை புரிந்தே தன் வாழ்நாளை தூய்மையாக்கினார்.
  5. சபரி, பூஜை செய்தே இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு, குரு திருவடியை அடைந்தார்.
  6. அக்ரூரர் நமஸ்காராம் செய்தே தம் அன்பை இறைவனிடம் காட்டினார்.
  7. ஹனுமார், ராமருக்கு தொண்டு செய்வதையே தன் வாழ்நாளின் நோக்கமாக கருதினார்.
  8. அர்ஜுனன், கண்ணையே தன் நண்பனாக கருதி, அன்பையும், மரியாதையும் பொழிந்தார்.
  9. பலி சக்ரவர்த்தி, இனி என்னிடம் எதுவும் இல்லை, என்னையே எடுத்து கொள் என்று தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்புவித்தவர்.

இவ்வனைத்து வழிமுறைகளும் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து உயிரனங்களுக்கும் சொந்தமானவை. உண்மையில் நடந்த ஒரு சிறு கதை என் நினைவுக்கு வருகிறது. உப்பிலியப்பன் கோவிலில் ஒரு யானை வெகு காலமாக ஸ்வாமியை தூக்கிக் கொண்டு அழகாக வீதிகளில் உலா வரும். அதற்கு வயதாகி விட்ட காரணத்தால், இந்த ஆண்டு வேறு ஒரு யானையை தேர்ந்தெடுக்கலாம் என்று நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. யானைகளுக்கு ஒரு ஓட்ட பந்தயம் வைத்து, அதில் முதலில் வரும் யானையே கோவில் யானையாக தேர்ந்தெடுக்கலாம் என்றும், அந்த யானைக்கே இனி ஸ்வாமியை தூக்கி உலா வரும் பாக்கியம் உண்டு என்றும் முடிவெடுத்திருந்தார்கள். பந்தயம் நடக்கும் சமயத்தில், உடல் நலம் சரியில்லாத இந்த யானை ஒரு இடத்தில் கட்டி போட்டிருந்தார்கள். ஆனால், இந்த யானை யாரும் எதிர்பாராத வகையில், தன்னை கட்டிய கயிற்றை அருத்துக் கொண்டு, பந்தயம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டது. யானை பந்தயத்திலும் கலந்து கொண்டு, முதல் இடத்தை பிடித்துவிட்டது. நிர்வாகம் வேறு வழியில்லாமல், இந்த யானைக்கே முதல் உரிமை கொடுத்து, அந்த வருடம் முழுவதும் மிகவும் சிரத்தையோடு ஸ்வாமியை ஊர்வலமாக அழைத்து சென்றது. ஆனாலும், யானையின் உடல் நலம் சரியில்லாத காரணாத்தாலும், யானை தள்ளாடுவதாலும், நிர்வாகம், யானை மேல் ஸ்வாமியை ஏற்ற வேண்டாம் என்று தீர்மானித்தார்கள். அன்று இரவு, கோவில் தர்மகர்தா கனவில், இறைவனே வந்து யானையின் சேவையை தடுக்க வேண்டாம் என்று சொன்னதாக தெரிந்தது. அதன் பின், அந்த யானையின் சேவையை யாரும் தடுக்க முற்படவில்லை. ஒரு நாள், யானை வழக்கம் போல் ஸ்வாமியை அழகாக ஊர்வலமாக அழைத்து வந்து, கோவிலில் இறக்கிய பிறகு, கோவில் வெளியே சென்று ஒரு இடத்தில் அயர்ச்சியாக படுத்துக் கொண்டது. அதுவே அந்த யானையின் கடைசி உறக்கமாக ஆயிற்று. அந்த யானையையும், அதன் பக்தியையும் நினைவு கூறும் விதமாக, அந்த இடத்தில் யானை சிலை ஒன்றை வைத்துள்ளார்கள். யானை, கடவுள் மீது உள்ள பாசத்தைக் காட்ட தன் வாழ்நாளில் எவ்வளவு முயற்சி செய்திருக்கிறது. தாஸ்யம் என்னும் சேவையை அதை உணராமலே அன்பின் வெளிப்பாடாக காட்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, பிராணிகளும், பக்தியை வெளிக்காட்ட முடியும் என்பதற்கு இந்த கதையே உதாரணம்.

தினமும், மனிதர்களிடம் நம்மை நிரூபிப்பதிலும், வாக்கு வாதங்களிலும் செலவிடும் நேரங்களில் நூற்றில் ஒரு பங்காவது நாம் இறைவனிடம் அன்பை காட்டுவதிலும், நன்றி செலுத்துவதிலும், உறவை பேணுதலிலும் செலவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை தொப்புள் கொடி உறவுகள் நமக்கு கிடைத்திருந்தாலும், “அணு விதைத்த உறவை” நாம் என்றும் மறக்கலாகாது.

Leave a comment