ஆழ்மனதுக்குள் ஓர் பார்வை

உலகத்தில் வாழும் அனைத்து உயிரனங்களை விட, இருக்கும் அனைத்து இயந்திரங்களை விட மிக ஆச்சர்யமானது இந்த மனித உடம்பு என்னும் இயந்திரம் தான். நாம் கண்டுபிடித்த இயந்திரங்களுக்கு கூட அதனை பயன்படுத்தும் விதங்களை பற்றியும், செயல்பாடுகளை பற்றியும் நன்கு விளக்கும் விதமாக ஒரு புத்தகம் இருக்கும். இப்படி தான் மனிதன் செயல்படுவான் என்று ஒரு பொழுதும் கூறி விட முடியாது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்த பிறகும் கூட இன்னும் இந்த மனிதனின் நடவடிக்கை இந்த நேரத்தில் இப்படித் தான் இருக்கும் என்று அவனிடம் நெருங்கி பழகியவர்கள் கூட சிறிது அனுமானிக்க தான் முடியுமே தவிர யாராலும் உறுதியாக கூறி விட முடியாது. அதற்கு மூலக் காரணமாய் இருப்பது, மனிதனுக்குள் இருக்கும் விந்தையிலும் விந்தையான “மனது” தான். ஒரு மனிதனின் வாழ்க்கைக்கும், அவன் செய்யும் காரியங்களுக்கும்  அடிப்படையாக இருப்பது அவனது மனது மட்டுமே.

மனதுக்குள் ஆழ்மனது என்று ஒன்று இருக்கிறது. அதன் செயல்பாடு தான் இத்தனை விந்தைக்கும் காரணமாகிறது. அதனுடைய முக்கியத்துவத்தை வார்த்தைகளினால் விவரிக்க முடியாது. மனிதனுடைய ஆழ்மனதில் தான் அவனுடைய ரகசியங்கள், ஏற்படும் அனுபவங்கள் போன்ற பல முக்கிய விஷயங்கள் புதைந்து கிடக்கிறது. ஒரு இயந்திரம் தன்னிடம் கொடுக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு ஒரு கருவியையோ அல்லது மற்றொரு பொருளையோ தயாரிக்கும். அதுபோல், ஆழ்மனது தன்னிடம் கொடுக்கும் மூலப் பொருள்களாக தனக்கு நேரும் அனுபவங்களையும், எதிர் கொள்ளும் சம்பவங்களையும், ஏற்படும் வெற்றி, தோல்விகளையும்,  இன்ப துன்பங்களையும் எடுத்துக் கொள்ளும். ஒரு பசு, எப்படி தான் உட்கொண்ட உணவினை சாப்பிட்ட பிறகு மறுபடியும் அதை எடுத்து மெதுவாக அசைபோடுமோ, அதுபோல, இந்த அனுபவங்களை ஆழ்மனது நமக்கும் அறியாமல் ஆராய்ந்து அசைப்போட்டு பல விஷயங்களை தனக்குள் வெளிக்கொணரும். இதில் விந்தை என்னவென்றால், இவை வெளிக்கொணரும் விஷயங்களை பொறுத்தே தான் ஒரு மனிதனின் எதிர்கால வாழ்க்கை அமைகிறது. ஆழ்மனது வெளிக்கொணரும் சில பண்புகள் தான் மனிதனின் கருத்து, வாழ்க்கையை எதிர் கொள்ளும் விதம், ஒரு சம்பவத்தை நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்களோடு அணுகுவது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, சுய கௌரவம் போன்ற எண்ணற்ற விஷயங்கள் அடங்கியுள்ளன.

பாலை கடைந்து வெண்ணை எடுப்பது போல, ஆழ்மனது தனக்கு ஏற்படும் அனுபவங்களை கடைந்து சில பண்புகளை வெளிக்கொணர்கிறது.  கண்ணபிரான் தனது சிறு வயதில் வெண்ணையை மிக விருப்பதுடன் உண்பார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான். ஆனால், கண்ணபிரானின் இந்த செயலுக்கு பின்னால் ஒரு தாத்பர்யம் ஒளிந்திருக்கிறது என்று கூறுவார்கள். நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் அது நமக்கே புரிந்துவிடும். ஆழ்மனது தனக்கு கிடைத்த அனுபவங்களை கடைந்து வெளிக்கொணர்வது வெண்ணையை போன்ற தூய்மையான, கள்ளம் கபடமில்லாத நல்ல பண்புகள் நிறைந்த மனதாக இருந்தால், அதை கண்ணபிரான் என்றும் மிக விருப்பத்துடன் நம் அனுமதியின்றி கவர்ந்து சென்று விடுவார் என்பது தான். நம் மனதும், அதன் செயல்பாடுகளும் எப்படி நம்மையும் அறியாமல் ஆன்மீகத்தோடு பிண்ணி பிணைந்திருக்கிறது என்பதை எண்ணி பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. கடவுள் என்றும் நடுநிலைவாதி என்று கூற காரணம், இந்த அழகான மனதை கடவுள் ஆத்திகனுக்கும், நாத்திகனுக்கும் சமமாக அளித்திருக்கிறார். ஆனால், கடவுள் ஒரு அபாயகரமான சுதந்திரத்தை நமக்கு அளித்துள்ளார். அது என்னவென்றால், இவ்வளவு முக்கியதன்மை வாய்ந்த மனதை ஆளும் திறனை மட்டும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரிடமே விட்டு விடுகிறார்.

இதனால் தான், வாழ்க்கை ஒரு பரீட்சை என்றும், அனுபவங்கள் எல்லாம் அதில் பாடங்கள் என்றும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள் போலும். நம்மிடம் எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதையும், நமக்குறிய கடமைகளையும் சூட்சுமமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள் போலும். அனுபவங்களையோ, சம்பவங்களையோ மாற்றி அமைக்கும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால், இதையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் மனதாகிய இயந்திரத்தை கட்டுப் படுத்தும் சக்தி நம்மிடம் உள்ளது. இதனால் தான் எப்போதும் மனிதனின் மனதை நல்ல ஆரோக்கியமானதாகவும், உயிரோட்டமானதாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகிறது.

எல்லா வரிக்குதிரைகளும் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் அதன் உடம்பில் உள்ள கோடுகளின் அமைப்பு ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் வித்தயாசமானது. அதுபோல தான், மனிதனின் வாழ்க்கையும், அவன் சந்திக்க நேரிடும் சுக துக்கங்களும், அவன் கடந்து போகும் அனுபவங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமானது. ஏன்னென்றால், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்கிற வகுப்பு வேறு, அனுபவங்கள் என்கின்ற பாடங்கள் வேறு. ஆனால், படித்து பரீட்சையில் தேர்வது அனைவருக்கும் பொருந்துவது போல, மனதை அடக்கி ஆள்வது என்பது அனைவருக்கும் பொருந்தும்.

ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் கிடைக்கும் அனுபவங்கள் கணக்கில் அடங்காதவை. ஒரு குழந்தையின் சிரிப்பை பார்ப்பதன் மூலம் நமக்குள் பலவித எண்ணங்கள் எழுகின்றன. சிறு வயது என்பது கவலைகள், பயம், பணத்தாசை, பேராசை போன்ற பல விஷயங்கள் நம்மை தீண்டாத உன்னதமான நிலை என்று உணர்த்துகிறது. சாலையில் நடந்த ஒரு விபத்தின் காட்சி மட்டுமே நம் மனதில் பெரிய தாக்கத்தையும், சஞ்சலத்தையும் உருவாக்குகிறது. ஒரே நாளில் இதுபோல பல விஷயங்கள் நம்முள் வந்து போவதுண்டு. இவற்றை நாம் கண்டும் காணாமலும் விரைந்து அலுவலகம் செல்வதுண்டு. ஆனால், ஒவ்வொறு முறையும் மனம் அனுபவங்களை ஆராய்வதில் உட்கொள்ளப்படுகிறது, இவை அனைத்தையும் நம் ஆழ்மனது நிதானமாக ஆராய்கிறது. மனது இதனை ஆராயும் கால நேரம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு, வேலை செய்யும் போதே ஆராயும் – அதனால் அவர்களுக்கு வேலையில் கவன சிதறல் ஏற்படும். நம் உடல் எப்படி காடு, மலைகள், அழகான ஊர்கள் போன்ற பிரயாணத்திற்கு பிறகு அயர்ச்சி அடைகிறதோ, அதுபோல, நம் மனம் இவ்வளவு அனுபவங்களின் பிரயாணத்திற்கு பிறகு, தள்ர்ந்து போய்விடும். இம்மனதை உயிரோட்டமுடனும், ஆரோக்கியதுடனும், கட்டுக்குள் வைத்திருக்கத்தான் நம் முன்னோர்கள், முனிவர்கள் பல வழிமுறைகளை நமக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஆராய்ந்து வெளிவரும் சிந்தனைகளும், கருத்துக்களும் நம் வாழ்நாளில் இனி வரவிருக்கும் சம்பவங்களை எதிர்கொள்வதிற்கு பாலமாய் அமைகின்றன. இதன் வெளிப்பாடு சில சமயங்களில் நம் கனவிலும் உலாவருவதுண்டு. இதில் விந்தை என்னவென்றால், இது ஒரு சுழற்சக்கரம் போல – ஆரம்பத்தில் எல்லாம், அனுபவங்களை பொருத்து தான் அழ்மனது ஆராயும், ஆனால் காலம் போகப் போக ஆழ்மனது ஆராய்ந்து வெளிக்கொணரும் விஷயங்களை பொருத்து தான் நமக்கு இனிமேல் வரும் அனுபவங்களும், சம்பவங்களுமே நிகழும். ஆகையால் நம் மனதின் போக்கையும், வெளிக்கொணரும் பண்புகளையும் நாம் கவனத்தோடு கண்கானிப்பது அவசியமாகிறது.

வாழ்க மனித குலம், வளர்க மனிதனின் வளம்.

Advertisements

One thought on “ஆழ்மனதுக்குள் ஓர் பார்வை

  1. அனு,
    ரொம்ப ஆழ்ந்த கருத்துக்கள்…அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு..உனது எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்

    – அருண் கோவிந்தன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s